ஊத்துக்கோட்டையில் வீதி உலா வந்த விநாயகரை தரிசிக்க கூடி நிற்கும் பெண்கள்.
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விநாயகர் கோயில்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. ஊத்துக்கோட்டையில் உள்ள ஆனந்தவல்லி சமேத நீலகண்டேஸ்வரர் கோயிலில் விநாயகர், சிவன், பார்வதி, முருகன், வள்ளி, தெய்வானை தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டன. மாலையில், ஐந்தடி உயரமுள்ள மான் மீது அமர்ந்த விநாயகர் சிலையை டிராக்டரில் வைத்து, ஊர்வலமாக சென்றனர்.
விழாக்குழு தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் ராசமாணிக்கம்,ஊர் பெரியவர் திருத்தணி ரெட்டியார், ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். ரெட்டி தெரு, செட்டி தெரு, நேரு பஜார், திருவள்ளூர் சாலை, நாகலாபுரம் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்றது. வழியெங்கும் பக்தர்கள், விநாயகருக்கு பூஜை செய்தனர்.பின்னர், ஊத்துக்கோட்டையில் உள்ள ஏரியில் விநாயகர் சிலையை கரைத்தனர். பல பகுதிகளில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட சிலைகள் இங்கு கரைக்கப்பட்டன.

No comments:
Post a Comment