கிருஷ்ணா கால்வாயில் இருந்து பூண்டிக்கு வருகிறது தண்ணீர். அடுத்தபடம்: நீர் மட்டத்தை காட்டும் அளவுகோல்.
சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க தமிழக, ஆந்திர மாநிலங்களுக்கு இடையே தெலுங்கு & கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஆண்டுதோறும் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணா நீர் திறந்து விடப்படுகிறது.
15 டிஎம்சி தண்ணீரில் 3 டிஎம்சி சேதாரம் போக ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும் தமிழகத்துக்கு தரவேண்டும்.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட்டை 23ம் தேதி மாலை வந்தடைந்தது.
பின்னர் அங்கிருந்து கிருஷ்ணா கால்வாய் வழியாக பூண்டி நீர்தேக்கத்துக்கு தண்ணீர் வந்தது. கண்டலேறு அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அது படிப்படியாக 2,000 கன அடியாக உயர்த்தப்பட்டது.நேற்று காலை நிலவரப்படி ஜீரோ பாயின்ட்டுக்கு 862 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதுவரை தமிழகத்துக்கு 2.60 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது. கிருஷ்ணா நீர் வருகையால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இங்குள்ள உபரி நீர் இணைப்பு, பேபி கால்வாய் வழியாக புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்படுகிறது.