Sunday, July 17, 2011

பெரியபாளையம் பவானி அம்மன்

பவானி அம்மன் கோயிலில்,ஆடித்திருவிழா கோலாகலம்
ஊத்துக்கோட்டை, ஜூலை 18:
பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆடி திருவிழா நேற்று காலை கோலாகலமாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் அம்மனுக்கு விழா எடுப்பது வழக்கம். ஆடி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமை என 10 வாரம் தொடர்ந்து விழா நடைபெறும். உள்ளூர் மற்றும் வெளியூர், பிற மாநில பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள்.
பக்தர்கள் மாட்டு வண்டி, வேன், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வாரம்தோறும் சனிக்கிழமை இரவு கோயிலுக்கு வருவார்கள். கோயிலில் தங்கியிருந்து ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.
இந்த ஆண்டு ஆடி திருவிழா நேற்று காலை கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி, இரு தினங்களுக்கு முன்பிருந்தே பக்தர்கள் கோயிலுக்கு வரத்தொடங்கினர்.
கடந்த வெள்ளிக்கிழமை கோ பூஜையும், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், நேற்று முன்தினம் கணபதி ஹோமமும், 108 பால்குடம் அபிஷேகமும் நடந்தது.
நேற்று அதிகாலை அம்மனுக்கு விசேஷ அலங்காரத்துடன் நவகலச பூஜை நடந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் பொங்கல் வைத்து, உடலில் வேப்பிலை கட்டி கோயிலை வலம் வந்தனர். மேலும், ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.பக்தர்கள் திரண்டனர்
கோயிலுக்கு வேப்பிலை ஆடை கட்டி வந்த சிறுமி.



பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் முதல் வார ஆடித் திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. கோயிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம். அடுத்தபடம்: பெரியபாளையத்துக்கு பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் அங்குள்ள மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஊத்துக்கோட்டை செம்மர கட்டைகள் பிடிபட்டன

ஊத்துக்கோட்டையில் உள்ள நாகலாபுரம் சாலையில் உள்ள சோதனை சாவடியில், ஊத்துக்கோட்டை போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து வந்த சொகுசு காரை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் நிற்காமல் அந்த கார் வேகமாக சென்றது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், எஸ்.ஐ.க்கள் ரஜினிகாந்த், கணேசன், ஏட்டு சங்கர் ஆகியோர் பைக்கில் காரை பின்தொடர்ந்து, ஊத்துக்கோட்டை பஸ் நிலையம் அருகே சுற்றி வளைத்தனர்.
உடனே, கார் கதவை திறந்து வெளியே வந்த டிரைவர் சற்று தூரம் ஓடினார். காருக்கு பின்னால் வந்த பைக்கில் ஏறி அவர் தப்பி விட்டார். பின்னர், போலீசார் காரில் சோதனையிட்டனர். அதில் 14 செம்மர கட்டைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.1 லட்சம்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து, செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த காரை, ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் நிறுத்தியுள்ளனர். தப்பியோடிய டிரைவரையும், பைக்கில் வந்த நபரையும் தேடி வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட செம்மரக் கட்டைகள்.

ஊத்துக்கோட்டையில் அரசு மருத்துவமனைல் டாக்டர் இல்லாததால் பரிதாபம்

ஊத்துக்கோட்டை, ஜூலை 17:
சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சரவணன் (24), தனியார் நிறுவன ஊழியர். தனது நண்பர்களான தாம்பரத்தை சேர்ந்த விஜயபாஸ்கர், நாகூர் மீரான், அரவிந்த், ஆனந்த்ராஜ், வெங்கட் ராமச்சந்திரன், விஷால், விக்னேஷ் உட்பட 9 பேருடன் நேற்று முன்தினம் ஊத்துக்கோட்டை பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை அடுத்த நாகலாபுரம் அருகே சத்திகூடு மடுகு பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் நேற்று மதியம் அனைவரும் குளித்தனர். குளித்து முடித்ததும் அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது, சரவணனை மட்டும் காணவில்லை. அவரை தேடிய போது, மூச்சு திணறலால் நீர்வீழ்ச்சி அருகே மயங்கி கிடந்தார்.
உடனே,மாலை 4.30 மணியளவில் அவரை, ஊத்துக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் இல்லாததால், அவருக்கு உடனே சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதனால் சரவணன் இறந்தார். சரவணனின் நண்பர்கள், அவரது சடலத்தை மருத்துவமனை முன்பு வைத்து அழுதனர்.
தகவலறிந்து, ஊத்துக்கோட்டை போலீஸ் எஸ்.ஐ. ரஜினிகாந்த் அங்கு வந்தார். சம்பவம் நடந்த பகுதி ஆந்திர மாநிலம் என்பதால் நாகலாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு கூறினார். இதையடுத்து, அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக சத்தியவேடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.