Sunday, July 17, 2011

பெரியபாளையம் பவானி அம்மன்

பவானி அம்மன் கோயிலில்,ஆடித்திருவிழா கோலாகலம்
ஊத்துக்கோட்டை, ஜூலை 18:
பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆடி திருவிழா நேற்று காலை கோலாகலமாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் அம்மனுக்கு விழா எடுப்பது வழக்கம். ஆடி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமை என 10 வாரம் தொடர்ந்து விழா நடைபெறும். உள்ளூர் மற்றும் வெளியூர், பிற மாநில பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள்.
பக்தர்கள் மாட்டு வண்டி, வேன், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வாரம்தோறும் சனிக்கிழமை இரவு கோயிலுக்கு வருவார்கள். கோயிலில் தங்கியிருந்து ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.
இந்த ஆண்டு ஆடி திருவிழா நேற்று காலை கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி, இரு தினங்களுக்கு முன்பிருந்தே பக்தர்கள் கோயிலுக்கு வரத்தொடங்கினர்.
கடந்த வெள்ளிக்கிழமை கோ பூஜையும், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், நேற்று முன்தினம் கணபதி ஹோமமும், 108 பால்குடம் அபிஷேகமும் நடந்தது.
நேற்று அதிகாலை அம்மனுக்கு விசேஷ அலங்காரத்துடன் நவகலச பூஜை நடந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் பொங்கல் வைத்து, உடலில் வேப்பிலை கட்டி கோயிலை வலம் வந்தனர். மேலும், ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.பக்தர்கள் திரண்டனர்
கோயிலுக்கு வேப்பிலை ஆடை கட்டி வந்த சிறுமி.



பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் முதல் வார ஆடித் திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. கோயிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம். அடுத்தபடம்: பெரியபாளையத்துக்கு பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் அங்குள்ள மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment