பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் ஆடி திருவிழா கடந்த 17ம் தேதி தொடங்கியது. ஆடி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி வாரம் தோறும் சனி, ஞாயிற்றுக் கிழமை என 10 வாரம் தொடர்ந்து விழா நடைபெறும்.
உள்ளூர், வெளியூர், பிற மாநில பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். கோயிலில் தங்கியிருந்து ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.
3வது வாரமான நேற்று காலை, அம்மனுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகம், விசேஷ அலங்காரத்துடன் பூஜை நடந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கோயிலுக்கு வந்த பெண் பக்தர்கள், சிறுவர், சிறுமிகள் வேப்பிலை ஆடை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு கூழ் ஊற்றி, எலுமிச்சை மாலை சாற்றி, கோயில் பிரகாரத்தை சுற்றிவந்து விளக்கு ஏற்றி வழிபட்டனர். மாலையில், நாக வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.
No comments:
Post a Comment